காலைத் தியானம் – ஏப்ரல் 23, 2026

வியாழன்                வீரத்தை வென்ற விவேகம்!

23-04-2026

2 சாமுவேல் 20:1–26

அதிர்ந்தன கோட்டை மதில்கள்! சேபா என்ற கிளர்ச்சிக்காரனைத் தேடி, இஸ்ரவேலின் படைத்தளபதி யோவாப் ஆபேல் பட்டணத்தை முற்றுகையிடுகிறான். மதில்களை இடித்துத் தள்ள போர் எந்திரங்கள் முழங்குகின்றன. பட்டணம் அழியும் தருணம்! அப்போது, மதில் மேல் தோன்றுகிறாள் பெயர் தெரியாத ஒரு பெண்பிள்ளை. அவள் கையில் கொற்றவாள் இல்லை; ஆனால் ஆயுதங்களை விடக் கூர்மையான விவேகம் இருந்தது. இரக்கமற்ற யோவாபிடம் அவள் சமாதானம் பேசுகிறாள். அடுத்த சில நாழிகைகளில், கிளர்ச்சிக்காரன் சேபாவின் சிரம் கொய்யப்பட்டு மதில் சுவருக்கு வெளியே வீசப்படுகிறது. என்னவொரு ஆச்சரியம்! ரத்தக் களரியைக் காணத் துடித்த ராணுவம், முரசு கொட்டி அமைதியாகத் திரும்புகிறது. வாள் முனையில் நிற்க வேண்டிய ஒரு மாபெரும் போர், வார்த்தை முனையில் முடிவுக்கு வந்தது! பலம் பொருந்திய பராக்கிரமசாலிகள் சாதிக்க முடியாததை, ஒரு பெண்ணின் விவேகம் சாதித்துவிட்டது. உங்கள் பிரச்சனைகளை உணர்ச்சியாலும் கோபத்தாலும் எதிர்கொள்ளாதீர்கள்; ஆவியானவர் தரும் விவேகம், பெரும் அழிவுகளையே தடுத்து நிறுத்தும் வல்லமை கொண்டது!

ஜெபம்: சர்வஞானியே, என் வாழ்வில் எழும் மோதல்களைக் வேகத்தால் அல்ல, உமது விவேகத்தால் எதிர்கொள்ள எனக்குக் கற்றுத்தாரும். என் வார்த்தைகள் அழிவை அல்ல, சமாதானத்தைக் கொண்டுவரக் கிருபை செய்யும். ஆமென்.