காலைத் தியானம் – ஏப்ரல் 24, 2026

வெள்ளி                விதவையின் விடாமுயற்சி

24-04-2026

2 சாமுவேல் 21:1–14

சவுல் செய்த ரத்தப்பழிக்காக அவனுடைய சந்ததியார் ஏழு பேர் பலியிடப்படுகிறார்கள். மலை உச்சியில் ஏழு சடலங்கள் அந்தரத்தில் தொங்குகின்றன. அந்த அகோரமான களத்தில் ஆதரவற்ற தாய் ரிஸ்பாள், சாக்குப்புடவையை விரித்துத் தனித்திருக்கிறாள். பகலின் கொடும் வெயிலிலும், இரவின் உறையவைக்கும் பனியிலும், கழுகுகளும் காட்டுமிருகங்களும் அந்த உடல்களைப் பட்சிக்காதபடி ஒரு தனி மனுஷியாய்ப் போராடுகிறாள்! என்னவொரு நெஞ்சை உலுக்கும் காட்சி! அரண்மனையின் பஞ்சணையில் மாமன்னன் தாவீது இருக்க, சுட்டெரிக்கும் பாறையில் ஒரு தாய் தன் பாசத்தைக் கேடயமாக ஏந்தி நிற்கிறாள். அதிகாரமும் ஆயுதமும் செய்ய முடியாததை, ஒரு தாயின் ஓயாத கண்ணீர் சாதித்தது. அவளின் தியாகம் சக்கரவர்த்தியின் மனசாட்சியை உலுக்கியது; அந்தப் பலியானவர்களுக்கு ராஜமரியாதை கிடைத்தது, தேசத்தின் பஞ்சமும் நீங்கியது! பாவத்தின் பிடியில் அழிந்துபோன உங்கள் உறவுகளுக்காக நீங்கள் சிந்தும் ஓயாத கண்ணீரும் ஜெபமும் வீண்போகாது. நீங்கள் விடாமுயற்சியுடன் ஏறெடுக்கும் ஜெபத்தையே தேவன் விரும்புகிறார் (லூக் 18:1-8). அது ஒருநாள் வானத்தையும் பூமியையும் அசைத்து மாபெரும் விடுதலையைக் கொண்டுவரும்!

ஜெபம்: தேவனே, என் அன்புக்குரியவர்கள் அழிவின் விளிம்பில் இருந்தாலும், அவர்களுக்காக இடைவிடாமல் ஜெபிக்கிறேன். என் கண்ணீரைக் கண்டு என் குடும்பத்தின் வேதனைகளை மாற்றி, விடுதலையைத் தந்தருளும். ஆமென்.