செவ்வாய் அகதியான அரசன்
14-04-2026
2 சாமுவேல் 15:13–37
எருசலேம் அரண்மனையில் பேரிடி! எத்தனையோ பராக்கிரமசாலிகளைப் புறமுதுகிடச் செய்த மாவீரன், இன்று தன் சொந்த மகனுக்கே பயந்து சிம்மாசனத்தை விட்டு அகதியாக வெளியேறுகிறான். கீதரோன் ஆற்றைக் கடந்து, தலைவிரி கோலமாய், வெறும் கால்களோடு கண்ணீர் மல்க ஒலிவ மலையில் ஏறுகிறான் இஸ்ரவேலின் சக்கரவர்த்தி! என்னவொரு பரிதாபக் காட்சி! ஆனால், இந்த இருண்ட பயணத்தில்தான் தாவீதின் ஆவிக்குரிய முதிர்ச்சி பிரகாசிக்கிறது. ஆசாரியர்கள் தேவனுடைய உடன்படிக்கைப் பெட்டியைச் சுமந்துகொண்டு ராஜாவின் பின்னால் வருகிறார்கள். ஏலியின் குமாரர்களைப் போலத் தேவனுடைய பெட்டியை ஒரு மந்திரப் பொருளாகப் பயன்படுத்த தாவீது நினைக்கவில்லை. “பெட்டியை நகரத்திற்கே திருப்பி அனுப்புங்கள்; கர்த்தருடைய சித்தமானால் நான் அதை மீண்டும் காண்பேன்” என்று கூறி, அவருடைய பரிபூரண ஆளுகைக்குத் தன்னை முழுமையாக ஒப்புக்கொடுக்கிறான். இன்று பிரச்சனைகள் வரும்போது, நாம் தேவனையும், ஜெபத்தையும் நம் இஷ்டப்படியே காரியங்களைச் சாதித்துக்கொள்ளும் ஒரு கருவியாகப் பார்க்கிறோமா? அல்லது முழுமையாக தேவ சித்தத்தைச் சார்ந்து இருக்கிறோமா? சிம்மாசனத்தை விட, தேவனுடைய சித்தத்திற்குள் இளைப்பாறுவதே ஒரு மனிதனுக்கு உண்மையான பாதுகாப்பு!
ஜெபம்: என் அடைக்கலமானவரே, என் வாழ்வில் எதிர்பாராத நெருக்கடிகள் வரும்போதும், உமது சித்தத்திற்கு என்னை முழுமையாக ஒப்புக்கொடுக்கும் பக்குவத்தை எனக்குத் தாரும். ஆமென்.
