வியாழன் கர்வத்தின் வலை
16-04-2026
2 சாமுவேல் 16:15–17:14
எருசலேம் அரண்மனையில் இப்போது ஒரு சதுரங்க ஆட்டம். தாவீதின் நிழலாய், ராஜ்யத்தின் மூளையாய் இருந்த மதியூகி அகித்தோப்பேல், இப்போது எதிரிப் பாசறையில்! அவனுடைய ஆலோசனை என்பது, தேவன் சொல்லும் வாக்குக்குச் சமமாகக் கருதப்பட்டது. அவன் தாவீதைக் கொல்ல போட்ட திட்டம் துல்லியமானது, பயங்கரமானது. அது அரங்கேறியிருந்தால், தாவீதின் கதை அன்றே முடிந்திருக்கும்! ஆனால், ஒலிவ மலையில் அகதியாக ஏறியபோது தாவீது செய்த ஒரு சிறு ஜெபம் அகித்தோப்பேலின் ஆலோசனையை அதமாக்கியது. அப்சலோமின் நெஞ்சில் குடிகொண்டிருந்த ‘அகங்காரம்’ என்ற பலவீனத்தையே தேவன் அவனுக்கு எதிராகத் திருப்பினார். ராஜதந்திரமிக்க அகித்தோப்பேலின் ஆலோசனையை விட, ஊசாயின் முகஸ்துதிக்கு அப்சலோம் மயங்கினான். அந்தத் தருணமே தேவன் அப்சலோமின் அழிவை உறுதி செய்தார்! மனித மூளை எவ்வளவு பெரிய வியூகங்களை வகுத்தாலும், தேவனுடைய தீர்மானத்திற்கு முன் அவை தவிடுபொடியாகும். முகஸ்துதிக்கும் கர்வத்திற்கும் மயங்கும் மனிதன் தன் அழிவைத் தானே தேடிக்கொள்கிறான். கர்விகளைக் கர்த்தர் அவர்களின் சொந்த அகந்தையின் வலையிலேயே விழப்பண்ணுவார்!
ஜெபம்: சர்வவல்லவரே, என் வாழ்வில் உமது சித்தத்தைத் தடுக்கும் மனித தந்திரங்களை நீரே முறியடித்தருளும். முகஸ்துதிக்கும் கர்வத்திற்கும் மயங்கி நான் என் அழிவைத் தேடிக்கொள்ளாதபடி, என் இதயத்தில் தாழ்மையைத் தந்தருளும். ஆமென்.
