காலைத் தியானம் – செப்டம்பர் 29, 2020

நெகே 13: 1- 3                    

பல ஜாதியான ஜனங்களையெல்லாம் இஸ்ரவேலை விட்டுப் பிரித்துவிட்டார்கள்    

இஸ்ரவேல் புத்திரர் அம்மோனியருடனும், மோவாபியருடனும் கலந்துவிடக் கூடாது என்பது கர்த்தருடைய கட்டளை. கர்த்தர் பிரிவினைகளை உருவாக்குகிறவர் அல்ல. உலகனைத்தையும் படைத்த கர்த்தரைத் தொழுதுகொள்ளும் மக்களை, அவரிடமிருந்து மனிதன் படைத்த தெய்வங்களை வணங்கும் மக்கள் பிரித்துவிடக் கூடாது என்பதற்காகவே கர்த்தர் இஸ்ரவேலரை எச்சரித்தார். திருச்சபைக்குள் ஜாதி அடிப்படையில் நாம் உருவாக்கிக் கொள்ளும் பிரிவினைகளைக் கர்த்தர் வெறுக்கிறார். அதே சமயம், எம்மதமும் சம்மதம் என்று சொல்வதே கலாச்சாரம் என்று பலரும் நினைக்கும் இந்நாட்களில், கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவே இரட்சகர் என்பதை அறிந்து ருசித்தவர்கள், அதை அறியாதவர்களைத் திருமணம் செய்துகொள்வது மடத்தனம் (2 கொரி 6:14). ஒருவேளை அப்படிப்பட்ட தவறான திருமணத்தை ஏற்கனவே நீயோ அல்லது உன் பிள்ளைகளோ செய்திருந்தால் முழங்காலில் நின்று ஜெபிப்பதைத் தவிர நீ செய்யக்கூடியது ஒன்றுமில்லை. பிராமண குலத்தில் பிறந்து வளர்ந்து ஒரு கிறிஸ்தவ பெண்ணைத் திருமணம் செய்துகொண்ட கிருஷ் தனம் என்னும் பிரசங்கியார், தான் இயேசுவை அறிந்துகொண்டதற்கு தன் மாமியாரின் இடைவிடாத ஜெபமே காரணம் என்று சொல்கிறார். அன்பினாலும் ஜெபத்தினாலும் வெல்ல முடியாதது ஒன்றுமில்லை.

ஜெபம்

ஆண்டவரே, பலவிதமான பிரிவினைகளின் மத்தியில் சிக்கித் தவிக்கும் எனக்குத் தெளிந்த புத்தியைத் தாரும். ஆமென்.