சங்கீதம் 35:1–28
“விசுவாசத்தின் மொழி”
சவுல் தனது 3000 சிறந்த வீரர்களோடு தாவீதை வேட்டையாடிக் கொண்டிருந்த சமயம். தாவீதின் நிலைமை கவலைக்கிடம். பசி, சோர்வு, எந்தப் பக்கம் திரும்பினாலும் மரண பயம். இந்தச் சூழலில் தான் தாவீது இந்த சங்கீதத்தைப் பாடுகிறான்.
கவனித்திருக்கிறீர்களா? அதிகாலை, இன்னும் காரிருள் விலகாத நேரத்திலேயே பறவைகள் பாடத் தொடங்கிவிடும். சூரியன் உதித்துவிட்டதா? இல்லை. ஆனால், சூரியன் நிச்சயம் உதிக்கும் என்கிற நம்பிக்கை அந்தப் பறவைகளுக்கு உண்டு. வெளிச்சத்தைப் பார்த்த பிறகு பாடுவது சாதாரண அறிவு; ஆனால் இருட்டில் இருக்கும்போதே வெளிச்சத்தை நம்பிப் பாடுவதுதான் விசுவாசம். தாவீதுக்குள்ளும் அந்தப் பறவையின் சுபாவம் இருந்தது. எதிரி இன்னும் அழியவில்லை; சவுல் இன்னும் துரத்திக்கொண்டுதான் இருக்கிறான். ஆனால் தாவீதோ, “என் ஆத்துமா கர்த்தருக்குள் களிகூர்ந்து மகிழும்” (வசனம் 9) என்று பாடுகிறான். அழுகுரல் கேட்க வேண்டிய இடத்தில், தாவீது ஆராதனைச் சத்தத்தை எழுப்பினான். அதுவே அவன் பலம். இருள் சூழ்ந்திருக்கிறதா? உங்கள் சூழ்நிலை மாறும் வரை காத்திருக்காதீர்கள். இப்போதே துதிக்கத் தொடங்குங்கள்; உங்கள் துதிதான் உங்கள் விடியலின் ஆரம்பம்.
ஜெபம்:
கிருபை நிறைந்தவரே, நீர் எனக்கு ஜெயம் தருவீர் என்ற நிச்சயத்தோடு, இப்போதே, இந்த யுத்தத்தின் நடுவே உம்மைத் துதிக்கிறேன். ஆமென்.
