சங்கீதம் 24:1–10
“வாசல்கள் திறக்கட்டும்!”
திருவிழாக் கோலம். ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம்! மேள தாளங்களுடன் சீயோன் மலையை நோக்கி ஊர்வலமாக உடன்படிக்கைப் பெட்டியை கொண்டு வருகிறார்கள். அந்தப் பிரம்மாண்டமான ஊர்வலத்தின் நடுவே, ராஜாவான தாவீது சாதாரண ஒரு பக்தனைப் போல ஆனந்தத்தில் நடனமாடுகிறான் (2 சாமுவேல் 6).
சீயோன் மலை அடிவாரத்தில் நின்று தாவீது ஒரு கேள்வியைக் கேட்கிறான்: “கர்த்தருடைய பர்வதத்தில் ஏறுபவன் யார்?”. எவரெஸ்ட் சிகரத்தில் ஏறத் திறமையும், உடல் பலமும் வேண்டும். ஆனால் தேவனுடைய மலையில் ஏற அது போதாது. அங்கே ஏற ‘விசா’ கிடைக்க வேண்டுமென்றால் இரண்டு தகுதிகள் வேண்டும்: 1. கள்ளம் இல்லாத கைகள், 2. வஞ்சகம் இல்லாத இதயம். ஒன்று சுத்தமாக இருந்து, மற்றொன்று குப்பையாக இருந்தால் அனுமதி இல்லை. ஊர்வலம் உச்சியை நெருங்குகிறது. தாவீது கோட்டையின் வாசல்களைப் பார்த்து, “உயருங்கள்!” என்று முழங்குகிறான். ஏன்? பூமிக்குரிய ராஜா உள்ளே வரப்போவதில்லை; “மகிமையின் ராஜா” உள்ளே வருகிறார்! வாசல்கள் மரியாதையுடன் வழிவிட வேண்டும். நம் இதயமும் ஒரு கோட்டைதான். அதன் வாசல்கள் பெரும்பாலும் சுயநலம், பெருமை என்ற தாழ்ப்பாள்களால் பூட்டப்பட்டிருக்கின்றன. இன்றைக்கு அந்தக் கதவுகளைத் திறந்து வைப்போம். சுத்தம் உள்ளவர்கள் மட்டுமே ஏறக்கூடிய அந்த மலையில், மகிமையின் ராஜா தாமே இறங்கி நம் உள்ளத்திற்குள் வரத் தயாராக இருக்கிறார்.
ஜெபம்:
மகிமையின் ராஜாவே, என் உள்ளத்தின் வாசல்களை உமக்காகத் திறந்து வைக்கிறேன்; உம் கிருபையால், இயேசு கிறிஸ்துவின் தூய இரத்தம் என்னை மூடி உம்மை ஆராதிக்கத் தகுதியாக்குவதாக! ஆமென்.
