காலைத் தியானம் – மார்ச் 25, 2026

சங்கீதம் 20:1–9

“வெற்றிக்கு முன் ஒரு ஜெபம்” 

யுத்தத்திற்கு முன். படைவீரர்கள் வரிசையாக நிற்கிறார்கள். குதிரைகள் கனைக்கின்றன; ரதங்களின் சத்தம் கேட்கிறது. ஆனால், ராஜா தாவீது இன்னும் வாளை உருவவில்லை. அவன் ஆலயத்தை நோக்கித் தன் கைகளை உயர்த்துகிறான். இச்சங்கீதம் ஒரு ராஜாவுக்கான தனிப்பட்ட ஜெபம் அல்ல; ஒட்டுமொத்த தேசமும் தங்கள் தலைவனுக்காகச் செய்யும் கூட்டுப் பிரார்த்தனை.  

தாவீது தன் பலத்தை நம்பிப் போருக்குப் போகவில்லை. அவன் பலம் தேவனிடமிருந்து வருவதை ஐயமின்றி அறிந்திருந்தான். யுத்தபூமியில் வெற்றி கிடைப்பதற்கு முன், ஜெப அறையில் வெற்றி கிடைக்க வேண்டும். உலகம் ரதங்களைக் குறித்தும், குதிரைகளைக் குறித்தும் மேன்மை பாராட்டுகிறது. இன்றைய பாணியில் சொன்னால், சிலர் தங்கள் பண பலத்தையும், சிலர் தங்கள் அரசியல் செல்வாக்கையும் நம்புகிறார்கள். ஆனால் தாவீதின் சேனையோ, “எங்கள் தேவனாகிய கர்த்தருடைய நாமத்தைக் குறித்தே மேன்மை பாராட்டுவோம்” என்று முழங்குகிறது. ரதங்களை நம்பியவர்கள் முடங்கி விழுந்தார்கள்; தேவனை நம்பியவர்களோ நிமிர்ந்து நின்றார்கள். தேவ நாமம் ஒருபோதும் தோற்றதில்லை. தோல்வி உங்களிடமிருந்துத் துவங்கப் போவதுமில்லை.

ஜெபம்:

சேனைகளின் கர்த்தாவே, ஆபத்து நாளில் நீர் எனக்கு உயர்ந்த அடைக்கலமாயிரும். என் நம்பிக்கை முழுமையாக உம்மீதே உள்ளது. ஆமென்.