காலைத் தியானம் – மார்ச் 15, 2026

சங்கீதம் 18:1–29 

“என் பெலனே! என் அன்பே!  ” 

அந்தி சாயும் வேளை. சவுலின் அலைக்கழிப்புகள் ஓய்ந்தன. எதிரிகள் அடங்கினார்கள். தாவீது இப்போது குகையில் பதுங்கும் வாலிபன் அல்ல; இஸ்ரவேலின் சிம்மாசனத்தில் அமர்ந்திருக்கும் முதிர்ந்த ராஜா. தன் கடந்த காலத்தைத் திரும்பிப் பார்க்கிறான். மரணக் கண்ணிகள் தன்னைச் சுற்றிக்கொண்ட அந்த பயங்கரமான நாட்களை நினைவுகூர்ந்தபோது, அவன் உள்ளத்திலிருந்து பீறிட்டு வந்த கவிதை இது. 

இச்சங்கீதத்தில் தேவனின் வருகையைத் தாவீது வர்ணிக்கும் விதம் மெய்சிலிர்க்க வைக்கிறது. தாவீது கூப்பிட்டவுடன், தேவன் எப்படி வந்தாராம்? “வானங்களைத் தாழ்த்தி” (வசனம் 9) இறங்கினாராம். ஒரு சிறு மனிதனுக்காக, சர்வவல்லவர் வானங்களைப் பிளந்து, மின்னல்களைப் பாய்ச்சி, பூமி அதிர இறங்கி வருவாரா? வந்தார்! இனியும் வருவார். ஏன் இவ்வளவு பிரம்மாண்டமான மீட்பு? தாவீது மிகச்சிறந்த வீரன் என்பதாலா? இல்லை. அதற்கான காரணத்தை தாவீதே சொல்கிறான், கர்த்தர் தன்மேல் பிரியமாக இருந்தபடியால் அவனை விசாலமான இடத்திற்குக் கொண்டுவந்தார் (வசனம் 19). இதுதான் நற்செய்தி. நாம் திறமையானவர்கள் என்பதற்காக அல்ல, தேவன் நம்மேல் ‘பிரியமாய்’ இருப்பதால் நம்மைத் தேடி வருகிறார். சமுத்திரத்தின் ஆழத்தில் நாம் அமிழ்ந்து போனாலும், நமக்காக வானத்தைப் பிளந்து வரும் அன்பு அவருடையது. அந்த அன்பை ருசித்தவன், தேவனை நேசிக்காமல் எப்படி இருக்க முடியும்?

ஜெபம்:

கிருபை நிறைந்தவரே, என் தகுதியைப் பாராமல், என்மேல் நீர் வைத்திருக்கும் பிரியத்திற்காக நன்றி. என் வாழ்நாளெல்லாம் நான் உம்மில் மட்டுமே அன்புகூருவேன். ஆமென்.