சங்கீதம் 40:1–17
“சேற்றுக்குழியும் கன்மலையும்”
தாவீதின் வாழ்க்கையில் இது எந்தத் தருணம் என்று சரியாகச் சொல்ல முடியவில்லை; ஆனால் அவன் மனநிலை ஒரு புதைக்குழியில் சிக்கியவனைப் போல் இருந்தது. அது வெறும் குழி அல்ல; உளையான சேறு (Quicksand). அசைய அசைய உள்ளே இழுக்கும் ஆபத்து அது. இப்படிப்பட்ட இக்கட்டான நேரத்தில் நாம் என்ன செய்வோம்? பதறுவோம், துடிப்போம், “இப்போதே என்னை இரட்சியும்” என்று கூச்சலிடுவோம். ஆனால் தாவீது கர்த்தருக்காகப் பொறுமையுடன் காத்திருந்தான்.
நவீன காலத்தில் நமக்கு எல்லாம் ‘இன்ஸ்டன்ட்’ ஆக வேண்டும். நூடுல்ஸ் முதல் வெற்றி வரை எல்லாம் இரண்டு நிமிடத்தில் வேண்டும். ஆனால், சேற்றில் சிக்கியவன் அவசரமாகக் கால்களை உதறினால், இன்னும் ஆழமாகத்தான் உள்ளே போவான். அங்கே தேவை பதற்றம் அல்ல; மீட்பரை நோக்கிய பொறுமையான பார்வை. தாவீது அப்படிக் காத்திருந்ததின் முடிவு, தேவன் அவனைச் சேற்றிலிருந்து தூக்கி, வழுக்காத கன்மலையின் மேல் நிறுத்தினார். அதுமட்டுமல்ல, அழுகுரல் வரவேண்டிய அவன் வாயில், ஒரு புதுப்பாட்டை வைத்தார் (வசனம் 3). சேற்றுக்குழி அனுபவம் இல்லாமல், கன்மலை அனுபவம் இல்லை. நீங்கள் இன்று ஏதோ ஒரு குழியில் சிக்கித் தவிக்கிறீர்களா? பதறாதீர்கள். தேவன் உங்களைத் தூக்கும் நேரம் சமீபத்தில் உள்ளது. சேற்றிலிருந்து வரும் பாட்டுதான், ராகங்களிலேயே மிகவும் இனிமையானது.
ஜெபம்:
கன்மலையானவரே, பிரச்சனையான சேற்றில் நான் சிக்கித் தவிக்கும்போது, பதறிப்போய் தவறான முடிவுகளை எடுக்காதபடி, உமக்காகப் பொறுமையுடன் காத்திருக்க எனக்குக் கற்றுத்தாரும். ஆமென்.
