2 சாமுவேல் 12:24–31
“கிருபையின் கிரீடம்”
அரண்மனையில் மரண ஓலம் ஓய்ந்துவிட்டது. தாவீதின் குற்றத்தை உணர்த்திய சிட்சையின் கண்ணீர் காய்ந்து, இப்போது கிருபையின் புது வசந்தம் துளிர்க்கிறது. ஆம், பத்சேபாளுக்குப் பிறந்த புதுக் குழந்தைக்கு ‘சாலொமோன்’ (சமாதானம்) என்று பெயரிடுகிறான் தாவீது. முன்பு நியாயத்தீர்ப்பின் வாளோடு வந்த அதே நாத்தான் தீர்க்கதரிசி, இப்போது தேவனின் பரிபூரண அன்பைச் சுமந்து வருகிறான். குழந்தைக்கு ‘யெதிதியா’ (கர்த்தரால் நேசிக்கப்பட்டவன்) என்று பெயர் சூட்டுகிறான். என்னே ஆச்சரியம்! எந்த உறவு பாவத்தில் தொடங்கிக் கறையானதோ, அதே உறவில் பிறந்த பிள்ளையைத் தேவன் ராஜ்யத்தின் வாரிசாக நியமிக்கிறார்!
மறுபுறம், ரப்பா பட்டணத்தில் யுத்தம் உச்சக்கட்டத்தை அடைகிறது. எந்தப் போர்க்களத்தைத் தவிர்த்துப் பஞ்சணையில் பாவம் செய்தானோ, இப்போது அதே போர்க்களத்திற்குத் தாவீது வாளேந்திப் புறப்படுகிறான். அம்மோனிய ராஜாவின் தலையிலிருந்த விலையுயர்ந்த பொற்கிரீடம் தாவீதின் தலையில் சூட்டப்படுகிறது. அது வெற்றியின் சின்னம் மட்டுமல்ல; தேவன் ஈந்த கிருபையின் கிரீடம். பாவம் சிட்சையைக் கொண்டுவரும். ஆனால் மெய்யான மனந்திரும்புதலுக்குப் பின் தேவன் தரும் மன்னிப்பு, வெறும் ‘தண்டனையிலிருந்து விடுதலை’ அல்ல; அது ஒரு பூரண ‘மறுசீரமைப்பு’ (Restoration) – கடந்த காலத்துச் சாம்பலின் பூரண நீக்கம்; உன்னதமான நோக்கத்திற்கான அழைப்பு; கிருபையின் முடிசூடுதல்.
ஜெபம்:
தேவனே, என் பாவங்களை மன்னிப்பது மட்டுமல்லாமல், என்னை மீண்டும் உமது மகிமையின் கருவியாகப் பயன்படுத்தும் உமது அன்பிற்காக ஸ்தோத்திரம். ஆமென்.
