காலைத் தியானம் – ஏப்ரல் 07, 2026

2 சாமுவேல் 12:1–23

“சிம்மாசனத்தில் ஒரு குற்றவாளி” 

ஏறக்குறைய ஒரு வருடம் உருண்டோடிவிட்டது. பத்சேபாளுக்குக் குழந்தையும் பிறந்துவிட்டது. இருளில் புதைத்த பாவம் நிரந்தரமாக உறங்கிவிட்டதென்று தாவீது நிம்மதியாய் சிம்மாசனத்தில் வீற்றிருக்கிறான். அப்போது ராஜ சபைக்குள் நுழைகிறார் தீர்க்கதரிசி நாத்தான். அவர் கையில் வாள் இல்லை; ஆனால், ஆத்துமாவையும், ஆவியையும், கணுக்களையும் ஊனையும் பிரிக்கத்தக்கதான தேவனுடைய வார்த்தையோடு வருகிறார். ஒரு சிறுகதை சொல்லி, ராஜாதிராஜனின் நீதியுணர்ச்சியைத் தூண்டி தாவீதின் இரகசியப் பாவத்தை நிர்வாணமாக்குகிறார். அக்கணம் தாவீது தன் அதிகாரத்தைக் காட்டவில்லை; குற்றத்திற்குச் சாக்குப்போக்குச் சொல்லவில்லை. மண்டியிட்டுத் தன் குற்றத்தை முழுமையாக ஒப்புக்கொள்கிறான். இதுதான் தாவீதின் மெய்யான மனந்திரும்புதல்! தேவன் அவன் பாவத்தை மன்னிக்கிறார். நம்மிடமுள்ள பாவங்களை தேவனுடைய வார்த்தை சுட்டிக்காட்டும் போது, தற்காப்பு வாதம் பேசாமல் குற்றங்களை ஒப்புக்கொண்டு, தேவன் தரும் சிட்சையைப் பணிவுடன் ஏற்பதே உண்மையான மனந்திரும்புதல்.

ஜெபம்:

கிருபை நிறைந்தவரே, என் அந்தரங்கப் பாவங்களை உமது வார்த்தை சுட்டிக்காட்டும்போது தாவீதைப் போல மனந்திரும்பவும்  உம்மையே ஆராதிக்கவும் எனக்கு நவமான இருதயத்தைத் தாரும். ஆமென்.