காலைத் தியானம் – ஜூன் 23, 2026

செவ்வாய்                            அக்கினியால் இறங்கிய பதில்!

23-06-2026

1 இராஜாக்கள் 18:20–40

கர்மேல் மலையில் களம்! ஒருபுறம் பாகாலின் நானூற்றைம்பது போலித் தீர்க்கதரிசிகள்; மறுபுறம் சர்வவல்லவரின் ஒற்றைப் பிரதிநிதி எலியா! ஒட்டுமொத்த இஸ்ரவேலும் வேடிக்கை பார்க்கக் கூடிநிற்கிறது. பாகாலின் பூசாரிகள் காலைமுதல் மாலைவரை கத்தியும் கதறியும், தங்கள் சொந்த உடலைக் கிழித்து ரத்தம் சிந்தி, பலிபீடத்தைச் சுற்றி ஆடுகிறார்கள். அங்கே எந்த பதிலுமில்லை; மாலையில் எலியா முன்வருகிறான். அவன் தன் உடலைக் கிழித்துக்கொள்ளவில்லை, வெறிபிடித்து ஆடவில்லை; முற்றுமாய் உடைந்திருந்த கர்த்தருடைய பலிபீடத்தை பன்னிரண்டு கற்களால் கட்டியெழுப்புகிறான். ஒரு சிறிய, அமைதியான ஜெபம்! மறுகணமே, பரலோகத்தின் அக்கினி இறங்கி வந்து பலியையும் பலிபீடத்தின் கற்களையும் பட்சிக்கிறது! மனிதன் தன் மாம்சப் பிரயத்தனத்தால் (religious frenzy) தேவனைத் திருப்தி படுத்த முடியாது. உண்மையான பக்தி என்பது உன்னை நீயே வருத்திக்கொள்வதல்ல; உனது பலிபீடத்தை தேவனுடைய வார்த்தையின்படி மீண்டுமாய் கட்டியெழுப்புவதே! இன்று உனது ஜெபங்களுக்குப் பதில் தாமதமாகிறதா? ஆரவாரமான மதச் சடங்குகளை நம்புவதை விட்டுவிட்டு, தேவனுடைய வார்த்தையின்படி உன் ஆராதனையைச் சீர்ப்படுத்து; அவருடைய அக்கினி நிச்சயமாக இறங்கிவரும்!

ஜெபம்: ஆவியானவரே, என் சிந்தை, சொற்கள் மற்றும் செயல்கள் யாவும் உமக்கு மகிமை சேர்க்கும் மெய்யான ஆராதனையாக மாறட்டும். என்மேல் அக்கினியாய் இறங்கி, உமக்காக நான் என்றென்றும் வாழக் கிருபை தந்தருளும். ஆமென்.