காலைத் தியானம் – ஜூன் 24, 2026

புதன்                               மழையின் முழக்கம்!

24-06-2026

1 இராஜாக்கள் 18:41–46

கர்மேலில் அக்கினி இறங்கிய மாபெரும் வெற்றிக்குப் பின், எலியா ஓய்வெடுக்கச் செல்லவில்லை. அரியணையை உலுக்கிய வீரன், இப்போது தன் முகத்தை முழங்கால்களுக்குள் புதைத்துக்கொண்டு ஆழமான ஜெபத்தில் ஈடுபடுகிறான். வானத்திலிருந்து அக்கினியை ஒரு நொடியில் இறக்கியவனுக்கு, தேவன் வாக்களித்த மழையைக் கொண்டுவர ஏழுமுறை மன்றாட வேண்டியிருந்தது! ஏன்? அக்கினி என்பது தேவன் யார் என்பதை நிரூபிக்கும் ஒரு உடனடித் தீர்ப்பு; ஆனால் மழையோ, வறண்ட தேசத்தைக் குணமாக்கும் ஒரு நெடிய பயணம். தேசத்தின் வறட்சியைக் குணமாக்குவதற்கு, பரிதபிக்‍கும் தொடர் ஜெபம் தேவை! ஆகவே, முதல் வெற்றியைச் சுவைத்தவுடன் உன் ஆவிக்குரிய போராட்டத்தை ஒருபோதும் நிறுத்திவிடாதே. தேவன் உனக்கொரு வாக்குத்தத்தத்தைத் தந்திருக்கிறார் என்றால், அதைச் சுதந்தரிக்க நீ ஏழுமுறை அடிவானத்தைப் பார்க்க வேண்டியிருக்கலாம். தேவனுடைய வாக்குத்தத்தம் முழுமையாய் நிறைவேறும்வரை, சலிப்பின்றி தொடர்ந்து மன்றாடும் அசையாத ஜெப ஜீவியமே உன் சூழ்நிலையின் வறட்சியை மாற்றும்!

ஜெபம்: சர்வவல்லவரே, மாபெரும் வெற்றிகளைச் சுவைத்த பின்பும் நான் விசுவாசத்தில் மந்தமாகிவிடாமல், உமது வாக்குத்தத்தங்கள் முழுமையாய் நிறைவேறும்வரை சலிப்பின்றி முழங்காலில் காத்திருக்க எனக்கு உமது ஞானத்தையும் பெலனையும் தாரும். ஆமென்.