காலைத் தியானம் – பிப்ரவரி 10, 2026

2 சாமுவேல் 6:12–19

“கண்ணியம் களைந்த கோமான் ” 

எக்காளத் தொனி எருசலேமை அதிர வைத்தது. வீதி எங்கும் ஒரே கொண்டாட்டம். அங்கே ஆடிப்பாடி வருவது இஸ்ரவேலின் ராஜா தாவீதுதானா? சற்று உற்றுப்பாருங்கள்! அவன் உடலில் ராஜலட்சணமான ஊதா நிற அங்கி இல்லை; தலையில் பாரமான கிரீடம் இல்லை. ஒரு சாதாரண சணல் நூல் அங்கியைத் தரித்துக்கொண்டு, ஒரு சிறுபிள்ளையைப் போலத் துள்ளிக்குதித்து வருகிறான். அவனுடைய மனைவி மீகாளின் கண்களுக்குத் தாவீதின் செயல் தரக்குறைவாகத் தெரிந்தது. ஆனால் தாவீதுக்குத் தெரியும் – தான் ஆடுவது மனிதர்களுக்காக அல்ல, தன்னை ஆடு மேய்க்கும் இடத்திலிருந்து அரியணைக்கு உயர்த்தின தேவனுக்காக! இதுதான் தாவீதின் ரகசியம்: உலகம் பார்த்துக் கொண்டிருக்கிறது என்பதை பொருட்படுத்தாமல் உன்னதர் முன் வாழக் கற்றுக் கொண்டான் (He lived life for an audience of the One). தேவ சமூகத்தில் கௌரவம் பார்ப்பவன், தேவனுடைய மகிமையை ருசிக்க முடியாது. நம் அந்தஸ்தும், பட்டங்களும் ஆராதனைக்குத் தடையாய் இருக்கிறதா? அதை உடைத்தெறியுங்கள். மெய் மறந்து தேவனை ஆராதிக்கக் கற்றுக் கொள்ளுங்கள்.

ஜெபம்:

ராஜாதி ராஜாவே, உமது சமூகத்தில் நான் என் சுயத்தை கழற்றி வைத்துவிட்டு, இதோ வந்திருக்கிறேன். என் இதயம் உம்மில் களிகூர நீர் கிருபை தாரும். ஆமென்.