சங்கீதம் 34:1–22
“பைத்தியக்காரனின் பாட்டு”
காத் பட்டணத்து ராஜா ஆகீஸ் முன், தாவீது தன் வாயிலிருந்து நுரை தள்ள, சுவரில் கிறுக்கிக்கொண்டு, ஒரு பைத்தியக்காரனைப் போல நடித்துத் தப்பினான். தப்பியவன், அதுல்லாம் குகையில் தஞ்சம் புகுந்தபோது, அவன் உள்ளத்திலிருந்து பொங்கியெழுந்ததே இந்த சங்கீதம்.
என் பிள்ளைகளின் நாவில் மழலைத் தவழத் துவங்கிய போது அவர்களுக்கு நான் சொல்லிக் கொடுத்த முதல் வாக்கியம், “கர்த்தர் நல்லவர் என்பதை ருசித்துப் பாருங்கள்” என்பது. இவ்வார்த்தைகளைத் தாவீது அவமானத்தின் உச்சியில் பாடினான் என்று உங்களால் நம்ப முடிகிறதா? ஒரு இனிப்பின் சுவையை எப்படி வர்ணித்தாலும் புரியாது; அதை நாவில் வைக்கும்போதுதான் தெரியும். அதுபோல, தேவனை ருசித்தவனுக்கே அதன் அருமை தெரியும். குகையோ, அரண்மனையோ – அவரை ருசித்தவனுக்கு எல்லாம் இனிமைதான்.
ஜெபம்:
கிருபை நிறைந்தவரே, என் சூழ்நிலைகள் கசந்தாலும், உம்மை நான் ருசிக்கவும், குறைவில்லாத உமது பராமரிப்பில் களிகூரவும் எனக்குக் கிருபை தாரும். ஆமென்.
