சங்கீதம் 142:1–7
“தனிமைச் சிறை”
சவுலுக்குப் பயந்து ஓடிவந்தத் தாவீது, அதுல்லாம் குகையின் ஈரம் கசிந்த பாறைகளுக்கு நடுவே, தனித்திருந்தபோது இச்சங்கீதத்தை எழுதினான்.
வெளியே சத்துருக்கள்; உள்ளே தாங்க முடியாத தனிமை. சிறைச்சாலை என்பது இரும்புக் கம்பிகளால் ஆனது மட்டுமல்ல; “என்னை விசாரிக்க யாரும் இல்லையே” என்ற மனநிலையும் ஒரு கொடிய சிறைதான். ஆனால், அந்தத் தனிமையே தாவீதை தேவனுக்கு மிக அருகில் கொண்டு சென்றது. மனிதர்கள் கைவிடும்போதுதான், நாம் தேவனுடைய கையைப் பற்றிக்கொள்ள முடியும். தாவீது தன் குறைகளை மனுஷனிடம் சொல்லவில்லை; தேவனிடம் தன் மனதை ஊற்றினான். உங்கள் ஆத்துமா தனிமையில் தவிக்கிறதா? யாரும் என்னைப் புரிந்து கொள்ளவில்லை என்று நினைக்கிறீர்களா? கவலைப்படாதீர்கள். தாவீதைப் போல, உங்கள் புகலிடமான தேவனிடம் திரும்புங்கள். அவர் ஒருவரே நம் ஆத்துமாவைத் தனிமைச் சிறையிலிருந்து விடுவிக்க வல்லவர்.
ஜெபம்:
என் அடைக்கலமாகிய தேவனே, மனிதர்கள் கைவிட்டாலும் நீர் என்னைக் கைவிடாதவர். தாவீதைப் போல, என் உள்ளக் குமுறல்களை ஒளிவு மறைவின்றி உம் பாதத்தில் கொட்டுகிறேன். என் தனிமைச் சிறையை மாற்றி, உம்மைத் துதிக்கும் பாக்கியத்தைத் தாரும். ஆமென்.
