காலைத் தியானம் – பிப்ரவரி 22, 2026

சங்கீதம் 11:1–7

“அஸ்திபாரம் ஆடுகிறது!” 

சவுலின் கண்கள் சிவந்திருந்த காலம் அது. தாவீதைக் கொல்ல சதித்திட்டங்கள் தீட்டப்பட்டன. “வேடன் குறிவைத்த பறவைப் போல மலைக்கு ஓடிப்போ” என்று நலம் விரும்பிகள் எச்சரித்த பதற்றமான தருணத்தில் தாவீது இப்பாடலை எழுதினான்.

நண்பர்களின் கேள்வி நியாயமானதுதான். “அஸ்திபாரங்கள் நிர்மூலமாகும்போது நீதிமான் என்ன செய்வான்?” (வசனம் 3). நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து, நீதி செத்து, அராஜகம் தலைதூக்கும்போது ஒரு சாமானியன் என்ன செய்ய முடியும்? பயந்து ஓடுவதுதானே இயல்பு? ஆனால் தாவீதின் கண்கள் பூமியின் குழப்பத்தைப் பார்க்கவில்லை; பரலோகத்தின் ஆலயத்தைப் பார்த்தன. பயம் நம்மைத் துரத்தும்போது, நாம் ஓடி ஒளிய வேண்டியது மலைக்குகையில் அல்ல; கர்த்தருடைய பாதத்தில்தான். உலகம் “ஓடு” என்கிறது; விசுவாசம் “நில்” என்கிறது. நம் வாழ்க்கையின் அஸ்திபாரங்களே ஆடிப்போனாலும், கலங்காதீர்கள். பரலோகம் இன்றும் ஜெயமாக ஆட்சி செய்கிறது. அஸ்திபாரமே இடிந்தாலும், அதைத் தாங்கும் கன்மலை அவர் அல்லவா?

ஜெபம்:

கன்மலையானவரே, என் வாழ்வின் அஸ்திபாரங்கள் ஆடும்போது, நான் பீதியடைந்து ஓடிவிடாமல், உம்மை நோக்கிப் பார்க்கிறேன். நீரே என்மேல் கண்ணோக்கமாயிரும். ஆமென்.