சங்கீதம் 8:1–9
“அவன் எம்மாத்திரம்”
இது தாவீது தன் இளமைப் பருவத்தில், பெத்லகேமின் புல்வெளிகளில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்தபோது பாடியிருக்க வேண்டும்.
அண்டசராசரங்களைப் படைத்த விரல்கள், ஒரு குழந்தையைத் தாலாட்டுவதைப் பார்த்திருக்கிறீர்களா? அதுதான் இந்தச் சங்கீதத்தின் அழகு. பரந்த விரிந்த இந்த பிரபஞ்சத்தில் பூமி ஒரு சிறு புள்ளி; அதில் மனிதன் ஒரு தூசி. ஆனாலும், சர்வ வல்லமையுள்ள தேவன் அந்தத் தூசியின் மேல் எத்தனை பாசம் வைத்திருக்கிறார்! தேவதூதர்களுக்குச் சற்று சிறியவனாய் அவனைப் படைத்து, மகிமையென்னும் கிரீடத்தை அவன் தலையில் சூட்டியிருக்கிறார். நம்முடைய அறிவுக்கூர்மையோ, இறையியல் வாதங்களோ அல்ல; ஒரு சிறுபிள்ளையின் எளிய விசுவாசமே தேவனுடைய இருதயத்தைத் தொடும். இந்தக் காலத்தில், நம் மேதாவிலாசங்களைக் கழற்றி வைத்துவிட்டு, ஒரு சிறுபிள்ளையைப் போல அந்த மகத்துவமானவரைத் தேடி வருவோமா?
ஜெபம்:
வானங்களுக்கும் மேலானவரே, தூசியாகிய என்னை நீர் நினைவுகூரவும், என்மேல் விசாரணையாக இருக்கவும் நான் எம்மாத்திரம்? உமது அளவற்ற அன்பை நினைத்து, ஒரு சிறுபிள்ளையைப் போல உம்மைத் துதிக்கிறேன். ஆமென்
