2 சாமுவேல் 7:18–29
“நான் யார்? என் வீடெம்மாத்திரம்?”
“உன் ராஜ்யம் என்றென்றும் நிலைநிற்கும்” என்ற வார்த்தை தாவீதின் செவிகளில் ஒலித்துக் கொண்டிருந்தது. பொதுவாக, ஒரு அரசனுக்கு இப்படிப்பட்ட செய்தி வந்தால் என்ன செய்வான்? மந்திரிகளை அழைப்பான், விருந்து வைப்பான், தன் பெருமையைப் பறைசாற்றுவான். ஆனால் தாவீது என்ன செய்தான் தெரியுமா? நேராகக் கர்த்தருடைய சமூகத்திற்குச் சென்று மண்டியிட்டு, “தேவரீர் என்னை இதுவரைக்கும் கொண்டுவந்ததற்கு நான் எம்மாத்திரம்? என் வீடெம்மாத்திரம்?” என்று தன்னையே தாழ்த்தினான். முன்பு ஆட்டு மந்தையின் பின்னால் அலைந்தவன் இன்று ஒரு சாம்ராஜ்யத்தின் சக்கரவர்த்தி! இது தன் திறமையால் வந்ததல்ல, முழுக்க முழுக்க தேவ கிருபை என்பதை அறிக்கை செய்தத் தருணம் அது. தேவன் நம்மை உயர்த்தும் போது, நமக்குத் தலைக்கனம் ஏறக்கூடாது; மாறாக, அது அவர் ஈவு என்று உணர்ந்து மனதுருக வேண்டும். ஆசீர்வாதங்கள் நம்மைத் தாழ்த்த வேண்டுமே தவிர, தற்பெருமை கொள்ளச் செய்யக்கூடாது.
ஜெபம்:
கிருபை நிறைந்தவரே, ஒன்றுமில்லாத எனக்கு இவ்வளவு நன்மைகள் செய்து பாராட்டிய கிருபைகளுக்கு நான் பாத்திரனல்ல. நன்றியறிந்த உள்ளதோடு உம்மை ஆராதிக்கிறேன். துதி கனம் மகிமை எல்லாம் உமக்கே உரித்தாகட்டும். ஆமென்.
