காலைத் தியானம் – பிப்ரவரி 18, 2026


சாம்பல் புதன்

தபசு கால தியானங்கள்: சரித்திரத்தைத் தொடர்ந்து தியானிக்கும் முன், வேதம் தாவீதின் மனநிலையைப் படம்பிடித்துக் காட்டும் சங்கீதங்களுக்குள் செல்வோம். தாவீது தன் இருதயத்தைக் கிழித்து எழுதிய பாடல்களின் வழியே, வரும் நாட்களில் அவனோடு பயணிப்போம்.

சங்கீதம் 139:1-24

“எங்கே ஓடுவேன்?” 

தாவீது தன் வாழ்வில் பல மேடு பள்ளங்களைக் கடந்து, அனுபவங்களில் பழுத்து எல்லா நிலைகளிலும் தேவன் தன்னைத் தொடர்ந்து வந்ததை உணர்ந்து, மெய்சிலிர்த்து எழுதிய கவிதை இது. 

மனுக்குலத்தின் மிகப்பெரிய உள்ளுணர்வு ‘ஒளிந்துகொள்வது’. ஏதேன் தோட்டத்தில் ஆதாம் செய்ததைத்தான் நாம் இன்றும் செய்கிறோம். ஆனால் தாவீது “உமது ஆவிக்கு மறைவாக எங்கே போவேன்?” என்று கேட்கிறான். நாம் போடும் வேஷங்கள், பூட்டும் கதவுகள், அணைக்கும் விளக்குகள் – எதுவுமே சர்வவியாபியான அவரை நம்மிடமிருந்து மறைக்காது. தேவன் எல்லாவற்றையும் பார்க்கிறார் என்பது பாவிக்குப் பயம்; ஆனால் தாவீதுக்கோ அது பரவசமான ஆறுதல்! ஏன் தெரியுமா? நம் அழுக்குகளை முழுமையாக அறிந்திருந்தும், நம்மை வெறுக்காமல் நேசிக்கும் ஒருவர் உண்டென்றால் அது அவர் மட்டுமே. தபசு காலத்தின் இந்த முதல் நாளில், ஒளிந்துகொள்வதை நிறுத்துவோம். தாவீதைப் போல, “தேவனே, என்னை ஆராய்ந்து பாரும்; என் இருதயத்தை அறிந்து கொள்ளும்” என்று தேவனுக்கு முன் நம்மைத் திறந்து வைப்பதே உண்மையான உபவாசம்.

ஜெபம்:

எல்லாம் அறிந்தவரே, என்னை ஆராய்ந்து, என்னில் வேதனையான வழியிருந்தால் என்னை மாற்றி, நித்திய வழியில் நடத்தும். ஆமென்.