2 சாமுவேல் 11:1-27
“பஞ்சணையில் புரவலன்! ”
வசந்த காலம் பிறந்துவிட்டது. பூமி எங்கும் புத்தம் புது மலர்கள் பூத்துக் குலுங்கின. ஆனால், ராஜாக்களுக்கோ அது பூப்பறிக்கும் காலமல்ல; போர்க்களத்திற்குப் புறப்படும் காலம்! ரப்பா பட்டணத்தில் போர் முரசு கொட்டுகிறது; யோவாப் அங்கே ரத்தம் சிந்திப் போராடுகிறான். ஆனால் இஸ்ரவேலின் ராஜாவோ? எருசலேம் அரண்மனையின் பஞ்சணையில்! பேரரக்கர்களைக் கொன்றவனின் போர்வாள், உறையில் தூங்குகிறது; கூடவே தாவீதின் ஆவிக்குரிய விழிப்பும் தூங்கிவிட்டது. ஆபத்து அமோனியர் ரூபத்தில் வரவில்லை; சோம்பல் ரூபத்தில் வந்தது. “வேலையற்ற மனம் சாத்தானின் தொழிற்சாலை” (An empty mind is the devil’s workshop) என்பதை அவன் அறியவில்லை. தாவீதின் வாழ்வின் இந்தத் தருணத்திலிருந்து உலகச் சரித்திரம் திசைமாறியது. தேவன் நமக்கென நியமித்த வேலைகளை, அந்தந்தக் காலத்தில் நேர்த்தியாய் செய்பவர்களாக இருப்போமாக.
ஜெபம்:
தேவனே, என் ஆவிக்குரிய கண்கள் தூங்கிவிடாதபடி என்னைக் காத்தருளும். நான் இருக்க வேண்டிய இடத்தில் இருக்கவும், செய்ய வேண்டியதைச் செய்யவும் எனக்குத் திடன் தாரும். ஆமென்.
