சங்கீதம் 56:1–13
“கண்ணீர்க் குப்பி”
சவுலின் வாளுக்குத் தப்பியோடினான் தாவீது. ஆனால் வந்து விழுந்ததோ கோலியாத்தின் சொந்த ஊரான காத் பட்டணத்தில்! பெலிஸ்தர்கள் அவனைச் சூழ்ந்து கொண்டார்கள். தப்பிக்க வேறு வழியின்றி, ஒரு பைத்தியக்காரனைப் போல நடித்தான். வெளியே வேஷம்; உள்ளே வேதனை. அந்த மரண பயத்தின் நடுவே உதிர்ந்த வரிகள் இவை.
பழங்காலத்தில், பிரியமானவர்கள் அழுத கண்ணீரைச் சேகரித்து, அதை ஒரு குப்பியில் பத்திரப்படுத்தி வைக்கும் வழக்கம் இருந்தது. தாவீது வடித்த கண்ணீர் எதுவும் மண்ணில் வீணாக விழவில்லை; அவை தேவனுடைய கணக்கில் எழுதப்பட்டிருக்கின்றன என்ற நம்பிக்கை எவ்வளவு அழகானது! உலகம் நம் கண்ணீரைப் பலவீனம் என்று சொல்லலாம்; பரியாசம் செய்யலாம். ஆனால் தேவன் நம் கண்ணீர்த்துளிகளை, பொக்கிஷத்தைப் போலச் சேகரித்து வைக்கிறார். நமக்குப் பயம் வருவது இயல்பு; ஆனால் அந்தப் பயத்தை விசுவாசமாக மாற்றுவதே சிறப்பு.
ஜெபம்:
என் நேசரே, நான் பயப்படும் நாளில் உம்மையே நம்புவேன். என் கண்ணீர் எதுவும் உமக்கு மறைவாயிருக்கவில்லை; அவை உமது துருத்தியில் இருப்பதற்காய் ஸ்தோத்திரம். ஆமென்.
