2 சாமுவேல் 7:1–17
“அழிவில்லாத அரியணை”
கேதுரு மர அரண்மனையில் அமர்ந்திருந்தாலும், தாவீதின் சிந்தனை முழுவதும் திரைச்சீலைக்குள் இருக்கும் தேவனுடைய பெட்டியைச் சுற்றியே வட்டமிட்டது. அவன் தேவனுக்கு ஒரு ஆலயத்தைக் கட்ட விரும்பினான். ஆனால் தேவனோ, தாவீதுக்குக் காலத்தால் அழிக்க முடியாத ஒரு ராஜ்யத்தைக் கட்ட விரும்பினார்! “உன் சிம்மாசனம் என்றென்றைக்கும் நிலைநிற்கும்” என்ற அந்த வாக்குத்தத்தம், ஆயிரம் ஆண்டுகள் எனும் கால நதியைக்கடந்து, தாவீதின் குமாரனாகிய இயேசு கிறிஸ்துவிடம் நிறைவேறியது. மனிதன் கட்டும் கோபுரங்கள் மண்மேடாகும்; ஆனால் தேவன் ஸ்தாபித்த இந்த ராஜ்ஜியமோ, பூகோள எல்லைகளைக் கடந்து, மனிதர்களின் இதயங்களில் சிம்மாசனமிட்டுள்ளது. மண்ணில் தொடங்கிய இந்த அரசாட்சி, நித்தியத்திலும் தொடரும் ஒப்பற்ற சாம்ராஜ்யம். இதுவே தாவீதுக்குப் பரிசளிக்கப்பட்ட அழியாத அரியணை!
ஜெபம்:
வாக்குமாறாத தேவனே, மனிதர்கள் கைவிடினும், நீர் செய்த உடன்படிக்கையை ஒருபோதும் மறவாதவர். தாவீதுக்கு நீர் அருளிய அந்த நித்திய கிருபையே, இயேசு கிறிஸ்துவின் மூலம் எனக்கும் கிடைத்ததற்காக உம்மைத் துதிக்கிறேன். ஆமென்.
