சங்கீதம் 64:1–10
“இருளில் பின்னப்படும் சதி”
எருசலேம் நகரம். பஸ்கா பண்டிகையின் பரபரப்பு வீதிகளில் நிறைந்திருக்க, பிரதான ஆசாரியரின் மாளிகையில் ஒர் இரகசியக் கூட்டம் அரங்கேறிக் கொண்டிருக்கிறது. “பண்டிகையிலே வேண்டாம், எப்படியாவது அவரைத் தந்திரமாய்ப் பிடித்துக் கொல்ல வேண்டும்” என்று இருளில் ஒரு சதி வலை பின்னப்படுகிறது. சங்கீதம் 64-ல் தாவீது குறிப்பிடும் “துன்மார்க்கரின் இரகசிய ஆலோசனை” இதுதான். வெளிச்சத்திற்கு வரப் பயப்படும் வஞ்சகம், எப்போதும் இருளில்தான் தன் வலைகளை விரிக்கும். இங்கு இலக்கு யார்? எவ்விதக் குற்றமுமற்ற மாசற்ற இயேசு கிறிஸ்து தான்! முப்பது வெள்ளிக்காசுகளின் சத்தத்தில், ஒரு சீஷனின் துரோகம் அம்பு போலப் பாயக் காத்திருக்கிறது.
புனித வாரத்தின் இந்தப் புதன்கிழமை, யூதாசின் வஞ்சகமும், மதத்தலைவர்களின் சதிகளும் நடந்ததை நினைவுகூரும் நாள். நம் வாழ்விலும் சில வேளைகளில் நாம் நேசித்தவர்களே நமக்கு விரோதமாகக் கசப்பான வார்த்தைகளை வீசலாம்; முதுகுக்குப் பின்னால் சதிகள் நடக்கலாம். ஆனால், தாவீது ஒரு மாபெரும் உண்மையை இங்கே பாடுகிறான். “தேவன் அவர்கள்மேல் அம்பெய்தார்; சடிதியாய் காயப்படுவார்கள்” (வசனம் 7). இருளில் பின்னப்பட்ட அந்தப் பெரிய சதி, கல்வாரியில் சுக்குநூறாக உடைந்தது. மனிதர்களின் இரகசியத் திட்டங்களைக் கண்டு கலங்காதீர்கள். வஞ்சகர்களின் நாக்கு அவர்களுக்கே கேடாக முடியும். நீதியின் தேவன் தமது வில்லை நாணேற்றும் நேரம் ஒன்று உண்டு.
ஜெபம்:
நீதியின் தேவனே, எனக்கு விரோதமாக இருளில் பின்னப்படும் சதிகளையும், வீசப்படும் கசப்பான வார்த்தைகளையும் கண்டு நான் கலங்காதபடி, உமது சிறகுகளின் மறைவில் என்னைப் பாதுகாத்துக் கொள்ளும். ஆமென்.
