காலைத் தியானம் – மே 05, 2026

செவ்வாய்                           மரணப் படுக்கையின் கட்டளை!

05-05-2026

1 இராஜாக்கள் 2:1–12

மரணத் தருவாயில் உதிரும் வார்த்தைகள் சத்தியத்தின் சாறு. இதை அறிந்ததால்தான் நீதியரசர்கள் மரண வாக்குமூலத்திற்கு மிகுந்த முக்கியத்துவம் தருகிறார்கள். இஸ்ரவேலின் மகா சக்கரவர்த்தி, எத்தனையோ போர்க்களங்களைக் கண்டவன், தன் மரணப்படுக்கையில் தளர்ந்து கிடக்கிறான். தன் வாரிசான சாலொமோனிடம் அவன் கையளிப்பது கூர்மையான வாளையோ, ரகசியப் போர்த்தந்திரங்களையோ அல்ல; மாறாக, ஒரு ஆவிக்குரிய பத்திரத்தை! “உன் தேவனாகிய கர்த்தருடைய கட்டளைகளைக் கைக்கொள்” என்று ஒற்றை வரியில் ராஜ்யபாரத்தின் சூட்சுமத்தை உடைக்கிறான். (வசனம் 3). பகைவரின் சிரம் கொய்த மாவீரன், தன் நெடிய வாழ்வால் கண்டடைந்த மெய்ஞானம் இதுதான்: அதிகாரமோ, படைபலமோ ஒரு சாம்ராஜ்யத்தை நிலைநிறுத்தாது. தேவனுடைய பிரமாணங்களுக்குக் கீழ்ப்படிவதே அரண்மனையைக் காக்கும் உண்மையான அரண். உலக அரசியலோ, மனித வியூகங்களோ முடிவில் வீழ்ந்துபோகும்; கர்த்தருக்குப் பயப்படும் பயமே ஒருவனை அசைக்கமுடியாத தலைவனாக்குகிறது. இன்று, தாவீதின் அறிவுரை நமக்கும் பொருந்தும். ஆவியானவரின் வழிநடத்துதலின்படியெல்லாம் நடந்திடும் மனிதனே வாழ்வில் வெல்ல முடியும். 

ஜெபம்: நித்திய தேவனே, உலகப் புத்தி அல்ல, உமது வார்த்தையின்படி நடப்பதே என் வாழ்வின் மெய்யான வெற்றி என்பதை உணர்கிறேன். நீரே என்னை வழிநடத்தியருளும்; அதன்படி வாழ எனக்குப் பெலன் தாரும். ஆமென்.