காலைத் தியானம் – மே 06, 2026

புதன்                                  பதுங்கி வரும் பாவம்!

06-05-2026

1 இராஜாக்கள் 2:13–25

“சமாதானமாகத்தான் வந்திருக்கிறேன்” என்று தேனொழுகப் பேசும் அதோனியாவின் உதடுகளில் கொடிய நஞ்சு பதுங்கியிருக்கிறது. அவன் நயவஞ்சகமாகக் கேட்பது ஒரு பெண்ணை அல்ல; இஸ்ரவேலின் சிம்மாசனத்தை! நேற்று உயிருக்குப் பிச்சை கேட்டவன், இன்று ராஜ மாதாவையே பகடைக்காயாக உருட்டி வஞ்சகம் செய்கிறான். அபிஷாகை மணமுடிக்கக் கேட்பது, இஸ்ரவேலின் மகுடத்தைப் பறிக்கத் தீட்டப்பட்ட தந்திரமான சூழ்ச்சி. ஆனால், சாலொமோனின் ஞானம் இந்த நரித்தன்மையை உடனே மோப்பம் பிடித்தது; அடுத்த கணமே அதோனியாவின் சிரம் கொய்யப்பட்டது. பாவமும் அப்படித்தான். ஒருமுறை பலிபீடத்தில் தோற்றாலும், அடுத்தமுறை ‘சிறு ஆசை’ என்ற வேஷத்தில் பதுங்கி வரும். பிசாசு நீட்டும் சமாதானக் கொடியை ஒருபோதும் நம்பாதே; இன்று உன்னிடம் மண்டியிட்டு வரும் பாவம், நாளை உன் சிம்மாசனத்தையே பறித்துவிடும்!

ஜெபம்: சர்வஞானியே, ‘சிறு ஆசை’ என்ற போர்வையில் மண்டியிட்டு வரும் சாத்தானின் வஞ்சகங்களைக் கண்டறியும் ஆவிக்குரிய விவேகத்தை எனக்குத் தாரும். பாவத்தோடு எந்தச் சமரசமும் செய்யாமல், என் இதய சிம்மாசனத்தை உமக்காக மட்டுமே காத்துக்கொள்ள எனக்குத் திடன் தாரும். ஆமென்.