சனி சுயத்தில் சரிந்த ஞானம்!
30-05-2026
2 நாளாகமம் 8:1–10
தந்திரமான சதுரங்க ஆட்டம்! எருசலேம் மாளிகையின் பணிகள் முடிவடைய, சக்கரவர்த்தியின் கண்கள் தேசத்தின் பாதுகாப்பின் பக்கம் திரும்புகின்றன. வானளாவிய மதில்களோடும் இரும்புத் தாழ்ப்பாள்களோடும் அசைக்கமுடியாத அரண்கள் எழும்புகின்றன. ஆனால், இந்தக் கோட்டைகளைக் கட்டியெழுப்ப சாலொமோன் தீட்டிய வியூகம், ஒரு ஈடில்லா அரசியல் தந்திரம்! தன் சொந்த ஜனமான இஸ்ரவேலரை அவன் அடிமை வேலைக்கு உட்படுத்தவில்லை; அவர்களைத் தளபதிகளாகவும் வீரர்களாகவும் மகுடஞ்சூட்டினான். மாறாக, பல நூற்றாண்டுகளாக இஸ்ரவேல் அழிக்கத் தவறிய ஏவியர், எபூசியர் முதலான சத்துருக்களைத் தன் இரும்புப் பிடிக்குள் கொண்டுவந்து, அவர்களைக் கொத்தடிமைகளாய் மாற்றி தன் கோட்டைகளைக் கட்டச் செய்தான் (வசனம் 7-9). கர்த்தர் வேரோடு அழிக்கச் சொன்ன சத்துருக்களை, ‘என் கட்டுப்பாட்டில்தான் இருக்கிறார்கள்’ என்று லாபத்திற்காக உயிரோடு விட்டுவைத்தான். அவனது தந்திரத்தை உலகமே வியந்து பார்த்தது. ஆனால் தேவப் பார்வையில் அது அழிவின் தொடக்கம். எப்பேர்ப்பட்ட மானிட ஞானமும் தேவனுடைய கட்டளையை மீறினால் வீழ்வது நிச்சயம்! அந்த அடிமைகளின் விக்கிரகப் பழக்கங்கள் இஸ்ரவேலருக்குள் மெல்ல மெல்ல ஊடுருவி, முடிவில் மகாஞானியான சாலொமோனுக்கே சறுக்கலை உண்டுபண்ணியது. உன் இரும்புப் பிடிக்குள் இருப்பதாக நினைத்து நீ உயிரோடு விட்டுவைக்கும் எந்தப் பாவமும், ஒருநாள் உன் ஆத்துமாவையே சுக்குநூறாக்கும்!
ஜெபம்: கர்த்தாவே, ‘என் கட்டுப்பாட்டில்தான் இருக்கிறது’ என்று எண்ணி எந்தவொரு பாவத்தையும் எனக்குள் அடிமையாக வாழ அனுமதிக்காதபடி என்னைக் காத்தருளும். உலகத்தின் தந்திரங்களை அல்ல, உமது கட்டளைக்கு முற்றுமாய்க் கீழ்ப்படியும் பரிசுத்தத்தை எனக்குத் தந்தருளும். ஆமென்.
