காலைத் தியானம் – மே 31, 2026

ஞாயிறு                              தேடிவந்த தென்ராணி!

31-05-2026

2 நாளாகமம் 9:1–12

எருசலேமில் பிரம்மாண்ட பவனி! ஷேபா நாட்டு (இன்றைய ஏமன்) அரசியின் ஒட்டகப் படை வீதிகளில் தடம் பதிக்கிறது. தகிக்கும் பாலைவனங்களைக் கடந்து, தங்கத்தோடும் வாசனைத் திரவியங்களோடும் வந்து இறங்குகிறாள் ஒரு மகாராணி. தன் அறிவுக் கூர்மையால் சாலொமோனை மடக்கிவிடலாம் என்ற கர்வத்தோடு கடினமான புதிர்களை அள்ளி வருகிறாள். ஆனால், சாலொமோனின் மெய்ஞானத்தையும், அவன் கட்டிய ஆலயத்தின் பரிசுத்த ஒழுங்கையும் கண்ட மறுகணமே அவளது ராஜ கர்வம் சுக்குநூறாகிறது. தேவாலயத்தின் பிரம்மாண்டத்தைக் கண்டு அவள் மூச்சையிழந்தாள். உலகின் ஒரு கோடியிலிருந்து ஞானத்தைத் தேடி வந்த அரசி, முடிவில் கண்டது சாலொமோனை அல்ல; அவனுக்கு ஞானத்தை ஈந்த தேவனையே! மண்குவியலாய் பொன்னைக் குவித்து வைத்திருந்தவனின் முன், அவள் கொணர்ந்த செல்வம் வெறும் துரும்பானது. அவளது கேள்விகளை மாய்க்க வெளிப்பட்ட ஞானம், முடிவில் அவளது அகந்தையை மாய்த்தது. உலகத்தின் எந்தக் கருவூலமும் நிரப்ப முடியாத வெற்றிடத்தை தேவனுடைய பிரசன்னம் அங்கே நிரப்பியது. உலகத் தேடல்கள் உன்னை மலைக்க வைக்கலாம்; ஆனால் தேவனின் ஞானமே உன்னை நிலைக்க வைக்கும்!

ஜெபம்: கர்த்தாவே, உலகப் புகழைத் தேடாமல் உம் உன்னத ஞானத்தை மட்டும் தேடும் இதயத்தை எனக்குத் தாரும். மாயையான செல்வங்களைக் கண்டு மலைக்காமல், உம் பிரசன்னத்தில் இளைப்பாறக் கிருபைசெய்யும். ஆமென்.