காலைத் தியானம் – ஜூன் 04, 2026

வியாழன்                                சிதறிய சாம்ராஜ்யம்!

04-06-2026

1 இராஜாக்கள் 12:1–15

அரியணையில் அவிவேகம்! மகா ஞானியின் மகன் அரியணையில் அமர்கிறான்; ஆனால் அவனது முதல் முடிவே ஆகப்பெரிய முட்டாள்தனம்! தம் மக்களைக் கையாள சாலொமோன் முதன்மையாக ஞானத்தைக் கேட்டான். மகனோ தேவ ஆலோசனையையும் நாடவில்லை, பழுத்த அனுபவம் வாய்ந்த முதியவர்களின் ஆலோசனையையும் கேட்கவில்லை. மாறாக அனுபவமற்ற வாலிபர்களின் முரட்டு யோசனைக்குச் செவிசாய்க்கிறான். தன் அதிகாரத்தின் இரும்புப் பிடியைக் காட்ட நினைத்தவன், தவறான ஆலோசனையால் ஒரே நாளில் இஸ்ரவேலின் பிரம்மாண்டமான சாம்ராஜ்யத்தைச் சின்னாபின்னமாக்கினான். மாம்சப் பிரகாரமான ஆலோசனை எப்போதுமே மனிதர்கள் மீது பாரமான நுகத்தைச் சுமத்தி அடக்கியாளவே தூண்டும்; அந்த நுகம் முடிவில் அழிவையே தரும். ஆனால் ராஜாதிராஜாவான இயேசுவோ, முற்றிலும் மாறுபட்ட ஒரு ராஜ்யபாரத்தை உன் முன் வைக்கிறார். உலகத்தின் பாரமான நுகத்தடிகளை உதறிவிட்டு, “என் நுகம் மெதுவாயிருக்கிறது” என்று உன்னை அன்போடு அழைக்கும் இயேசுவிடம் வருவாயானால், அவர் உன்னைச் செம்மையான வழியில் நடத்துவார்; உன் ஆத்துமாவுக்கு மெய்யான இளைப்பாறுதல் கிடைக்கும்!

ஜெபம்: கர்த்தாவே, என் மாம்சத்தின் பாரமான நுகங்களை விட்டு விலகி, நான் உம்மண்டை ஓடிவருகிறேன். இலகுவான உமது நுகத்தை என்மேல் ஏற்றுக்கொண்டு, உமது அன்பின் நிழலில் என் ஆத்துமா மெய்யான இளைப்பாறுதலைக் கண்டடையச் செய்தருளும். ஆமென்.