சங்கீதம் 52:1–9
“வஞ்சகனின் நஞ்சு”
நோப் என்னும் இடத்தில் தாவீதுக்கு ஆசாரியர்கள் உதவிய செய்தியை, தோவேக் என்னும் ஏதோமியன் சவுலிடம் காட்டிக் கொடுத்தான். அவன் மூட்டிய தீயினால் 85 ஆசாரியர்கள் ஒரே நாளில் படுகொலை செய்யப்பட்டார்கள்! ரத்தம் தோய்ந்த அந்தச் சரித்திர நிகழ்வின் பின்னணியில் தாவீது எழுதிய கண்டனக் கவிதை இது.
ஒரு வீரன் தன் வாளை நம்புவான்; ஆனால் தோவேக்கோ தன் நாவை நம்பினான். சவரக்கத்தி மென்மையானதுதான்; ஆனால் கழுத்தை அறுக்கக் கூடியது. வஞ்சகரின் வார்த்தைகளும் அப்படித்தான் – தேனைப் போல இனிக்கும்; ஆனால் விஷத்தைப் போலக் கொல்லும். செல்வத்தினாலும், சூழ்ச்சியினாலும் தங்களைத் திடப்படுத்திக் கொண்ட தோவேக் போன்றவர்களைப் பார்த்து தாவீது பயப்படவில்லை. மாறாக, அவர்களின் அழிவை தீர்க்கதரிசனமாக உரைக்கிறான். தேவனை நம்புகிறவர்களோ, காலங்கள் மாறினாலும், ஆட்சிகள் கவிழ்ந்தாலும், கர்த்தருடைய ஆலயத்தில் பச்சையான ஒலிவமரத்தைப் போலச் செழித்திருப்பார்கள்.
ஜெபம்:
என் நேசரே, வஞ்சகர்களின் செழிப்பைக் கண்டு நான் மயங்காமலும், சோர்ந்து போகாமலும் இருக்க எனக்குத் திடன் தாரும். பச்சையான ஒலிவமரத்தைப் போல, உம் ஆலயத்தில் என்றும் நிலைத்திருக்கக் கிருபை தாரும். ஆமென்.
