காலைத் தியானம் – பிப்ரவரி 28, 2026

சங்கீதம் 63:1–11

“வறண்ட நிலத்தில் வசந்தம் ” 

இந்த சங்கீதம், தாவீது யூதா வனாந்தரத்தில் இருந்தபோது பாடியது. சுற்றிலும் மணல் வெளி; சுட்டெரிக்கும் வெயில்; தாகத்தைத் தணிக்கத் தண்ணீர் இல்லை. உடல் தாகத்தால் வறண்டிருந்த அந்த நேரத்தில், தாவீதின் ஆத்துமா இன்னொரு மேலான தாகத்தினால் துடித்துக்கொண்டிருந்தது.

வனாந்தரத்தில் விடியற்காலை எப்படி இருக்கும் தெரியுமா? குளிர் வாட்டும்; பனித்துளிகள் கூட இருக்காது. அந்த வறட்சியான, தண்ணீரில்லாத இடத்தில் தாவீது தேடுவது தண்ணீரை அல்ல; தேவனை! பொதுவாக மனிதன் ஆபத்தில் இருக்கும்போது “காப்பாற்றும்” என்று ஜெபிப்பான்; பசியில் இருக்கும்போது “உணவு தாரும்” என்று கேட்பான். ஆனால் தாவீதோ, தேவனுடைய வல்லமையையும் மகிமையையும் காண ஜெபித்தான். உயிர் வாழ்வதற்குத் தண்ணீர் தேவைதான்; ஆனால் அர்த்தமுள்ள வாழ்வு வாழ்வதற்கு தேவ கிருபை தேவை. வனாந்தரமே ஆனாலும், தேவனைத் துதிக்கும்போது அது அவனுக்கு விருந்துசாலையாக மாறுகிறது. சூழ்நிலை வறட்சியாக இருக்கலாம்; ஆனால் தேவனைத் தேடுகிறவன் உள்ளத்திலோ வற்றாத ஜீவநதி ஓடிக்கொண்டிருக்கும்.

ஜெபம்:

என் ஆத்தும நேசரே, உலகத்தின் களிப்புகள் என் தாகத்தைத் தீர்க்காது. வறண்ட என் வாழ்க்கையில், ஜீவனைப் பார்க்கிலும் மேலான உமது கிருபையை ருசிக்கச் செய்யும். ஆமென்.