சஞாயிறு எண்களில் தொலைந்த விசுவாசம்!
26-04-2026
2 சாமுவேல் 24:1–9
ஆணவத்தின் புள்ளிவிவரம்! ஒரு காலத்தில், “சிலர் இரதங்களைக் குறித்தும், சிலர் குதிரைகளைக் குறித்தும் மேன்மை பாராட்டுகிறார்கள்; நாங்களோ எங்கள் தேவனாகிய கர்த்தருடைய நாமத்தைக் குறித்தே மேன்மை பாராட்டுவோம்” (சங் 20:7) என்று பாடியவன் தாவீது. ஆனால் சாம்ராஜ்யம் விரிவடைந்ததும், அவனுள் ஒரு சூட்சுமமான அகங்காரம் நுழைந்துவிட்டது! தேவனை நம்பிய இதயம், இன்று தன் படைகளின் எண்ணிக்கையை நம்பத் துடிக்கிறது. “என் ராணுவத்தை எண்ணிப்பார்” என்று தளபதி யோவாபுக்குக் கட்டளையிடுகிறான். ஒன்பது மாதங்கள் ஊர் ஊராகச் சென்று எடுக்கப்பட்ட கணக்கு ராஜாவின் கைகளில்: பதின்மூன்று லட்சம் பராக்கிரமசாலிகள்! என்னவொரு ஆவிக்குரிய வீழ்ச்சி! கர்த்தரை மட்டுமே கேடயமாக நினைத்த மாவீரன், இன்று தன் மாம்ச பலத்தைக் கண்டு பெருமைப்படுகிறான். நீங்கள் எதை எண்ணிப் பாதுகாப்பு தேடுகிறீர்கள்? உங்கள் வங்கி இருப்பையா? உற்றாரின் செல்வாக்கையா? தேவனைத் தவிர்த்து நீங்கள் எண்ணி மகிழும் எந்த உலகப் பலமும் உங்களுக்கு நிரந்தரப் பாதுகாப்பைத் தராது!
ஜெபம்: சர்வவல்லவரே, உலகத்தின் பலத்தையும் எனக்குள்ள வசதிகளையும் நம்பி நான் ஏமாந்து போகாதபடி என்னைக் காத்துக்கொள்ளும். எந்தன் புகலிடமும் அசைக்கமுடியாத பலமும் என்றென்றும் நீர் தாமே. ஆமென்.
