காலைத் தியானம் – ஏப்ரல் 27, 2026

திங்கள்                தேவன் கரத்திலே தஞ்சம்! 

27-04-2026

சாமுவேல் 24:10–17

அழிவின் நிழல்! உன்னதரின் பாதுகாப்பை உதறி, தன் மாம்ச பலத்தை நம்பிய தாவீதின் அகந்தை, இதோ எருசலேமின் வீதிகளில் கொள்ளைநோயாக உருவெடுக்கிறது. மனித அகந்தையின் பயங்கர விளைவையும், தேவனுடைய நீதியான சிட்சையையும் இப்பகுதி காட்டுகிறது. இக்கட்டான தருணத்தில், மனிதர்களின் இரக்கமற்ற வாளைவிட, சிட்சையை அனுமதிக்கும் கர்த்தரின் கரங்களையே தாவீது நாடுகிறான். என்னவொரு முரண்பாடு! எந்தப் படைபலத்தைக் கண்டு கர்வம் கொண்டானோ, அதே பராக்கிரமசாலிகள் கண்முன்னே சருகுபோல உதிர்வதைக் கண்டு மேய்ப்பனின் இதயம் துடிக்கிறது. “இந்த ஆடுகள் என்ன செய்தது?” என்ற அவனது கதறல், நமக்காகத் தன்னுயிரைக் கொடுத்த உன்னத மேய்ப்பராம் கிறிஸ்துவின் தியாகத்திற்கு உன்னத முன்னடையாளம். உலகத் தீர்வுகளை நாடாமல், தேவனின் நீதியுள்ள ஆளுகைக்குள் நம்மை முழுமையாக ஒப்படைப்பதே மெய்யான பாதுகாப்பு!

ஜெபம்: பிதாவே, நான் உம்மை விட்டு விலகாதபடி உமது பாதுகாப்பு வளையத்திற்குள் என்னை வைத்து எப்பொழுதுமே காத்தருளும். உலகத்தின் தயவை விட, உமது நீதியுள்ள கரங்களில் தஞ்சம் புகுந்து நான் இளைப்பாறுவேன். ஆமென்.